

திண்டுக்கல்,
கொடைக்கானல் தாலுகா புதுபுத்தூர் கிராம மக்கள், நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்குள் அனைவரும் நுழைய முயன்றனர். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனைவரும் செல்லக்கூடாது என்று கூறி அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் புதுபுத்தூர் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிராம மக்களை சமரசம் செய்து மனு கொடுப்பதற்கு, ஒருசிலரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து புதுபுத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அருந்ததிய மக்களுக்கு, பிற சமுதாயத்தினர் வேலை வழங்குவதில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம் உள்பட இதர திட்டங்களிலும் எங்களுக்கு கூடுதலாக வேலை வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 35 கிலோ விலையில்லா அரிசி வழங்க வேண்டும்.
அதேபோல் சொந்த வீடு இல்லாமல் பலர் தவித்து வருகிறோம். இதனால் ஒரே வீட்டில் 3 குடும்பத்தினர் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்கி, அதில் இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். மேலும் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பொதுக்கழிப்பறை கட்டி, தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.