அரசு-தனியார் கல்குவாரி செயல்பாடுகளை நிறுத்தக்கோரி கிராம மக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்

பாறைகளை பிளக்க வைக்கப்படும் வெடிகளின் சத்தத்தில் ஏற்படும் அதிர்வினால் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டி, பாடாலூர் பகுதிகளில் அரசு-தனியார் கல்குவாரி செயல்பாடுகளை நிறுத்தக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரசு-தனியார் கல்குவாரி செயல்பாடுகளை நிறுத்தக்கோரி கிராம மக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 253 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். அப்போது இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கான சாய்வு தளபாதையை மறைத்து மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் படிவழியாக சிரமப்பட்டு வந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூரை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜா மலை பகுதியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் அளவுக்கு அதிகமான வெடிமருந்துகளை வைத்து பாறைகளை வெடித்து பிளக்க செய்வதால் அப்பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் உள்ளிட்டவற்றில் அதிர்வு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் உண்டாகிறது. கண்ணாடிகள் கிழே விழுந்து உடையும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் இடிந்து தூர்ந்து விடுவதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் பாறைகளில் வைக்கப்படும் வெடியின் சத்தத்தை தாங்கி கொள்ள முடியாமல் குழந்தைகள், கர்ப்பிணிகள் அச்சப்படுகின்றனர். எனவே இயற்கையை அழிவிலிருந்து மீட்டெடுக்க அரசு மற்றும் தனியார் கல்குவாரி செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை திரட்டி உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் அறவழியில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர். மனு கொடுக்க வந்த போது அந்த கிராம மக்கள், பாடாலூரை பாதுகாப்போம் இயற்கையை அழிக்காதே என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல் நாட்டார்மங்களம் ஊராட்சி கூத்தனூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மலையை ஏலம் விட்டு மீண்டும் கல்குவாரி செயல்பட உள்ளதாக தகவல் வந்திருக்கிறது. கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் குடிநீர் கிணற்றில் படர்வதால் தண்ணீர் மாசடைகிறது. இதனால் விவசாயம் பாதிப்படையக்கூடும். எனவே கல்குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கிராம மக்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை சுப்பிரமணியன் உள்பட கிராம மக்கள் அளித்த மனுவில், ஆலத்தூர் வட்டம் மலையப்பநகரில் நரிக்குறவர் இனமக்களுடன் கலைகூத்தாடிகளும் வாழ்ந்து வருகின்றனர். கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்வதே எங்கள் பிரதான தொழில். இந்த நிலையில் எங்கள் பகுதியில் கிரஷர் அமைப்பதற்காக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றிருக்கின்றனர். கிரஷர் அமைக்கப்பட்டால் சுற்றுப்புறசூழல் மாசடைந்து விவசாயம் பாதிக்கும். எனவே இங்கு கிரஷர் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

குன்னம் அருகே தேனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், தேனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்துதரப்படவில்லை. எனவே மக்கள் தொகை அடிப்படையில் துங்கபுரம் ஊராட்சியில் உள்ள தேனூரை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும். எங்கள் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பதில் மும்முரமாக இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். குரும்பலூரை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வெள்ளாடுகளை விரைவில் வழங்கக்கோரி மனு கொடுத்திருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com