அரிமளம் அருகே கடையக்குடி அணைக்கட்டின் ‌‌ஷட்டர்கள் பழுதடைந்ததால் வீணாகும் தண்ணீர்

அரிமளம் அருகே உள்ள கடையக்குடி அணைக்கட்டின் ‌‌ஷட்டர்கள் பழுதடைந்து உள்ளதால், அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரிமளம் அருகே கடையக்குடி அணைக்கட்டின் ‌‌ஷட்டர்கள் பழுதடைந்ததால் வீணாகும் தண்ணீர்
Published on

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கடையக்குடி அருகே 1933-ம் ஆண்டு ஹோல்ஸ் வொர்த் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டிற்கு புதுக்கோட்டை நகரில் பெய்யும் மழைநீர் ஒட்டைகுளம் வந்து அதன்பின்னர் குண்டாறு வழியாக இந்த அணைக்கட்டை வந்தடைகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்வதால் இந்த அணைக்கட்டில் தற்போது 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கட்டில் 20-க்கும் மேற்பட்ட ஷட்டர்கள் ஏற்ற இறக்க முடியாமல் துருப்பிடித்து பழுதடைந்து உள்ளன.

வீணாகும் தண்ணீர்

இதனால், பழுதடைந்த ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதை தடுக்க பொதுபணித்துறையினர் வைக்கோல் மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்தும் பலன் இல்லை. தண்ணீர் தொடர்ந்து வெளியேறி கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக அணைக்கட்டில் உள்ள ஒரு மதகு வழியாக வளநாடு கண்மாய்க்கு தண்ணீர் செல்வது வழக்கம். வளநாடு கண்மாய் நிரம்பிய பிறகு வாண்டாகோட்டை, வல்லதிராக்கோட்டை, பாலக்குடி, மணியம்பலம், கிங்கிணிப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, குடலூர், களங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்.

தற்போது இந்த அணைக்கட்டின் ஷட்டர்கள் பழுதடைந்து உள்ளதால் பெரும்பாலான தண்ணீர் வெளியேறி வீணாகிறது. ஆகவே, இந்த அணைக்கட்டில் உள்ள பழுதடைந்த ஷட்டர்களை சீரமைத்து எஞ்சியுள்ள தண்ணீரையாவது சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com