மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு - ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்ததால் நேற்று ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின.
மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு - ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் அதிகமாக மழை கிடைக்கிறது. அந்த சமயத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்புவது வழக்கம். கடந்த மாதம் பருவமழை தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால் அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கஜா புயலானது திண்டுக்கல்லை மையமாக கொண்டு தாக்கியது. அப்போது, மாவட்டம் முழுவதும் புயல் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் அணைகளுக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் நேற்று, கிடு, கிடுவென உயர்ந்தன.

புயலுக்கு முன்பு பழனி- கொடைக்கானல் இடையே உள்ள வரதமாநதி அணையின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஒரே நாளில் 19 அடி நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 66 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் 905 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல, கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள மாவூர் அணை ஒரே நாளில் 18 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 33 அடியை எட்டியது. பின்னர் அங்கிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிறுமலை அடிவாரத்தில் ராஜதாணிக்கோட்டை அருகே வறண்டு கிடந்த சிறுமலையாறு அணை ஒரே நாளில் முழு கொள்ளளவான 28 அடியை எட்டி மறுகால் சென்றது. இதேபோன்று திண்டுக்கல் ராமையன்பட்டி, நந்தவனப்பட்டி அருகே உள்ள குளங்களும் நிரம்பி உள்ளன.

திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் காமராஜர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 17 அடியாக அதிகரித்துள்ளது. மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com