ராயப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையன் கைது கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்

சென்னை ராயப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி நகையை திருடிச் சென்ற சம்பவத்தில் வடமாநில கொள்ளையன் புதுச்சேரியில் பிடிபட்டார். கண்காணிப்பு கேமரா உதவியுடன் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
ராயப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையன் கைது கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்
Published on

அடையாறு,

சென்னை ராயப்பேட்டை பொன்னுசாமி தெருவில் கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த செல்வி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 பவுன் வளையல்களையும் பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தையடுத்து, ராயப்பேட்டை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் உள்ளிட்ட தனிப்படையினர் குற்றவாளியை தேடி விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

அதில், அந்த மர்ம நபர் வந்த இருசக்கர வாகனம் புதுச்சேரி பதிவு எண்ணுடன் இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே அந்த மர்மநபர் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதனால், கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை புதுச்சேரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரித்ததில், அந்த நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ராயப்பேட்டை போலீசார் அந்த நபரை புதுச்சேரி நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் தத் (வயது 25) என்பதும், ராயப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது.

பின்னர், செல்வி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, வீடு புகுந்து நகைகளை பறித்துச் சென்றதும் உறுதியானது, இதையடுத்து, செல்வி கொடுத்த புகாரின் பேரில், கொள்ளையடிக்கப்பட்ட 7 பவுன் தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசார் ஜான்சன் தத்தை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com