

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா நன்னை கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர், அப்பகுதியிலுள்ள ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோர்ட்டு வரை சென்று போராடி வருகிறார். இதைத்தவிர மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனுக்களை அளித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்து வருகிறார். நீண்ட நாட்கள் போராடியும் உரிய தீர்வு கிடைக்காத விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கவும் முயற்சித்தார். அதன் பின்னரும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ச்சியாக மனு கொடுத்தார். இதனாலேயே கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், நல்லம்மாளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில், நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான ஆவணங்களை கையில் எடுத்து கொண்டு மனு கொடுக்க நல்லம்மாள் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், உயரதிகாரி தங்களை உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது உத்தரவிட்டிருப்பதாக கூறி நல்லம்மாளை தடுத்து நிறுத்தினார். ஜனநாயக நாட்டில் கோரிக்கை மனு அளிக்க உரிமை இல்லையா? என அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டவாறே அவர் வாயிலை கடக்க முயன்றார். அப்போது திடீரென அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலெக்டர் அலுவலக முன்பக்க பிரதான நுழைவு வாயில் கதவை அடைத்து உள்பக்கமாக பூட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நல்லம்மாள் வெளிபக்கம் கதவில் தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கேயே மண்டியிட்டு, ஆவணங்களை கீழே போட்டு கதறி அழுதார். மேலும் கொலை குற்றவாளியை போல் நடத்துகிறீர்களே? என கூறி தனது வேதனையை வெளிப்படுத்தி சத்தம் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அங்கிருந்த மற்ற போலீசார் உடனடியாக வாயில் கதவினை திறந்தனர். தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் பெண் போலீசார் நல்லம்மாளின் கையை பிடித்து தூக்கி அழுகையை நிறுத்துமாறு கூறி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை உள்ளே அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்தனர். பின்னர் அவர், ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டியை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் அவர் கதறி அழுத சம்பவம் காண்போரது நெஞ்சத்தை உருக்கும் விதமாக இருந்தது. நுழைவு வாயில் கதவை பூட்டிய அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சக போலீசார், இப்படி முறைதவறிய நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள்? என அறிவுறுத்தினர். நல்லம்மாள் அடிக்கடி பரபரப்பை உண்டாக்கிவிட்டு செல்வதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவில் எச்சரித்ததால் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.