

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. அப்போது தூத்துக்குடி கோரம்பள்ளம் வடக்கு காலாங்கரை பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 250 குடும்பங்கள் உள்ளன. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தடையில்லா குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று கயத்தாறு கட்டாளங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு பக்கத்து ஊரான ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே தண்ணீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விவசாய கடன்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு, மாநில அரசு உதவியுடன் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தமிழ்புலிகள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகள் குறித்து தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்தது. அதனை விரைவில் தமிழக அரசு தாக்கல் செய்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குவாரி
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கீழ வல்லநாடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட வெடி மருந்துகள் பயன்படுத்தி, பாறைகள் உடைக்கப்படுகிறது. இதனால் பூமியில் ஏற்படும் பயங்கரமான அதிர்வால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் விரிசலுடன் காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கல்குவாரிக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.