திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்
Published on

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் திகழ்கின்றன. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை வகிக்கிறது. காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறுவதால் குறுவை சாகுபடியும், கோடை சாகுபடியும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. தண்ணீர் பிரச்சினையாலும், இயற்கை இடர்பாடுகளாலும் விளைநிலங்கள் பரப்பளவு குறைந்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. வீடு கட்டுமான பணிகள் அதிகரிப்பதால் மூலதனமான செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வருவாய் தரும் செங்கல் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், புதுக்குடி, வலங்கைமான் போன்ற பகுதிகளில் களிமண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது.

இதன் காரணமாக பல தலைமுறைகளாக செங்கல் தயாரிப்பு தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தை மாதம் அறுவடை முடிவடைந்த பின்னர் ஜூன் மாதத்திற்கு மேல் தான் குறுவை சாகுபடியை தொடங்குகின்றனர். இந்த 5 மாதங்கள் தண்ணீர் பிரச்சினை காரணமாக எந்தவித வருவாயும் ஈட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கோடை காலத்தில் வருவாய் ஈட்ட செங்கல் தயரிப்பு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மடப்புரம் பகுதியில் செங்கல் காலவாய் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

விவசாயத்திற்கு மாற்றாக செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறை மூலம் மண் எடுப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் செங்கல் தயாரிப்பு தொழில் சற்று நலிவடைந்துள்ளது .இதனால் சொந்த இடத்திலும், வெளி இடத்தில் இருந்தும் மண் எடுப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் மாற்று தொழிலான செங்கல் தயாரிப்பும் நலிவடைந்து வருகிறது. எனவே சொந்த இடத்தில் செங்கல் தயாரிப்பதற்கு எந்தவித நிபந்தனையின்றி அனுமதி வழங்க வேண்டும்.

செங்கல் தயாரிப்பில் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சென்ற ஆண்டை விட விலை சற்று கூடியுள்ளது. காலவாயில் ஆயிரம் கல் ரூ.5 ஆயிரத்திற்கும், தூரத்திற்கு தகுந்தாற்போல் ரூ.6 ஆயிரம் என்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் செங்கல் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு மணல் தட்டுப்பாட்டை போக்கி செங்கல் உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com