தீர்த்தபாலீசுவரர் கோவில் காவலாளி கொலை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோவில் காவலாளி கொல்லப்பட்ட நிலையில், கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தீர்த்தபாலீசுவரர் கோவில் காவலாளி கொலை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, நடேசன் சாலையில் உள்ள புகழ்மிக்க தீர்த்தபாலீசுவரர் கோவிலில் கடந்த 17-ந்தேதி கோவில் பின்புற சுவர் வழியாக அடையாளம் தெரியாத சில நபர்கள் வந்து கோவில் உண்டியலை திருட முயன்றனர். இதை தடுக்க முயன்ற காவலாளி பாபு கொல்லப்பட்டார்.

இதையடுத்து தீர்த்தபாலீசுவரர் கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று மாலை கோவிலை சுற்றி பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் கோவிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் உடனடியாக பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பின்னர், கோவிலில் ஒப்பந்த நியமனத்தில் பணியாற்றி மரணமடைந்த காவலாளி பாபுவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மரணமடைந்த காவலாளியின் குடும்பத்திற்கு குடும்ப நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், சென்னை 2-வது மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com