‘‘வழிபட உரிமை உண்டு; ஆனால் புனிதத்தை கெடுக்க உரிமை இல்லை’’ சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி ஸ்மிரிதி இரானி கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் புனிதத்தை கெடுக்க உரிமை இல்லை என கூறியுள்ளார்.
‘‘வழிபட உரிமை உண்டு; ஆனால் புனிதத்தை கெடுக்க உரிமை இல்லை’’ சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி ஸ்மிரிதி இரானி கருத்து
Published on

மும்பை,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வணங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு கோவில் தேவசம்போர்டும், பக்தர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து பல பெண்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்கின்றனர். பக்தர்களின் போராட்டம் காரணமாக அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில், இங்கிலாந்து தூதரகம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

நான் மத்திய மந்திரியாக இருப்பதால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பேச முடியாது. ஆனால், சாதாரணமாக ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாதவிடாய் கால ரத்தம் தோய்ந்த சானிடரி நாப்கினை எடுத்துக்கொண்டு ஒரு தோழியின் இல்லத்துக்குள் நாம் நுழைவோமா? நிச்சயமாக மாட்டோம். அதே செயலை கடவுளின் இல்லத்துக்குள் நுழையும்போது செய்வது மரியாதையாக இருக்குமா? இருக்காது அல்லவா?

ஆகவே, வழிபட உரிமை இருக்கிறது என்பதற்காக, புனிதத்தை கெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. இந்த வேறுபாட்டை நாம் மதித்து நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com