திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இதன் வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் கார், லாரி, வேன் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறுகலான பாதையாக இருப்பதால் திம்பம் மலைப்பாதை வழியாக புதிதாக லாரி ஓட்டி வருபவர்கள் வளைவுகளை கடக்க முடியாமல் விபத்துக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகளும் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சுல்தான்பத்ரி என்ற ஊரில் இருந்து லாரி ஒன்று அட்டைகளை ஏற்றிக்கொண்டு பவானிசாகர் காகித ஆலைக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கதளயத்தை சேர்ந்த சம்சுதீன் (வயது 39) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 6-வது வளைவில் காலை 10 மணி அளவில் சென்றபோது லாரி நிலைதடுமாறி ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதில் டிரைவர் சம்சுதீன் லேசான காயம் அடைந்தார்.

நடுரோட்டிலேயே லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. மோட்டார்சைக்கிள், கார் மட்டுமே செல்ல முடிந்தது. ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அங்கு சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டன. லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com