

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஒன்றியம் கீழ்கரிப்பூர் ஊராட்சியில் கல்லணை மற்றும் கரிப்பூர் ஆகிய 2 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வந்த பணிதள பொறுப்பாளர்கள் 2 பேரை ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி அன்பழகன் நீக்கியதாக தெரிகிறது.
அவர்களுக்கு பதில் புதிதாக 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட 2 பேர் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் பழைய பணிதள பொறுப்பாளர்களை கொண்டு வேலை செய்ய வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேலை வேண்டியும், பழைய பணிதள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி அன்பழகன் தலைமையில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.