

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகராட்சி ரமணா ஆசிரமம் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (வயது 45). இவரது கணவர் மகாலிங்கம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சித்ரா (25), ஜெயா (22), சத்தியா (18) என 3 மகள்களும், அய்யப்பன் (20) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள்.
சித்ராவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. ஜெயா எம்.பில். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தந்தை இறந்த பின்பு அய்யப்பன் அவரது குடும்பத்தை விட்டு விலகி சென்றுவிட்டார். தற்போது வரலட்சுமி திருவண்ணாமலை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமியும், சத்தியாவும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து தங்களது குடும்ப நிலையினை விளக்கி, சத்தியா நர்சிங் படிக்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். சத்தியா 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 350 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 642 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் சத்தியா டிப்ளமோ நர்சிங் படிக்க விருப்பப்பட்டு மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தார். கலெக்டர் அழைப்பாணை வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவி சத்தியாவிற்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து கலெக்டர், சென்னை மருத்துவ கல்லூரிகள் இயக்குனரக தேர்வு குழு தலைவரை தொடர்பு கொண்டு மாணவியின் நிலையினை எடுத்து கூறி மேற்கொண்டு படிக்க உதவிடுமாறு கேட்டு கொண்டார்.
அதன் அடிப்படையில் மாணவி சத்தியா அரசு ஒதுக்கீட்டில் திருவண்ணாமலை அருணை நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று கலெக்டர் கந்தசாமி திருவண்ணாமலை நகராட்சி கோரிமேடு தெருவில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமியை திடீரென நேரில் சென்று சந்தித்து அவரது மகள் சத்தியா நர்சிங் பயில்வதற்கான அனுமதி ஆணையையும், கல்வி செலவிற்காக ரூ.10 ஆயிரத்தையும் வழங்கி சத்தியா கல்லூரி செல்ல வழியனுப்பி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி, மாணவி சத்தியா, அவரது தாய் வரலட்சுமி, அரசு அலுலவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருடன் டீக்கடையில் டீ குடித்தார். அப்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பாரிஜாதம் உடனிருந்தார். தங்களுடன் கலெக்டர் கடையில் டீ அருந்தியதை பார்த்து பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.