காவலாளியை கத்தியால் குத்தி பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது

மாமல்லபுரம் அருகே காவலாளியை கத்தியால் குத்தி பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், காவலாளியின் மனைவியையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
காவலாளியை கத்தியால் குத்தி பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையை சேர்ந்த ஒருவரின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 42 வயதான ஒருவர் தனது 40 வயது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

மர்ம நபர்கள் 3 பேர் அந்த வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர். காவலாளியை கத்தியால் குத்தி கட்டிபோட்டு விட்டு கொள்ளையடிக்க முயன்றனர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 3 மர்ம நபர்களும் காவலாளியின் மனைவியை ஒரு அறைக்கு அழைத்து சென்று அவர் அணிந்திருந்த கம்மலையும் கால் கொலுசையும் பறித்தனர். அவர்களில் ஒருவர் , காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு பால் கொண்டு வந்த பால்காரரின் சத்தம் கேட்கவே அவர்கள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். காவலாளி சிகி ச்சைக்காக கோவளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கைது

மர்மநபர்களை பிடிக்க மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் மர்மநபர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அது சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவருடையது என்று அடையாளம் கண்டுபிடித்தனர்.

போலீசார் அங்கு சென்று துப்பு துலக்கியதில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சுதர்சனம் என்ற ஆனஸ்ட்ராஜ் (வயது22) என்பருடையது என்பதை அறிந்து அவரை பிடித்து விசாரித்தனர்.

தன்னுடைய நண்பர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற விவரத்தை போலீசாரிடம் சுதர்சனம் தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் அவர் சொன்ன முகவரியை வைத்து சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20), மிதுன்(21), சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, ஸ்டன்கன் என்ற மின்சார கருவி, செல்போன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சுதர்சனத்தையும் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com