பெண்களுக்கு வங்கி மூலம் 3 மாதங்களுக்கு நிதி உதவி - தென்காசி கலெக்டர் தகவல்

பெண்களுக்கு வங்கி மூலம் 3 மாதங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தென்காசி கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் கூறினார்.
பெண்களுக்கு வங்கி மூலம் 3 மாதங்களுக்கு நிதி உதவி - தென்காசி கலெக்டர் தகவல்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமரின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வங்கிகளிலும் பிரதான் மந்திரி ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவும், தவிர்க்கவும் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண் வாடிக்கையாளர்கள் வங்கியின் நடைமுறையை கடைபிடித்து பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வங்கிகளில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். தங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும்போது வழங்கப்பட்ட ரூபே, டெபிட் கார்டை பயன்படுத்தி, ஏ.டி.எம். மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வங்கி மேலாளரையோ, வணிக தொடர்பாளரையோ தொடர்பு கொண்டு, உங்கள் பகுதிக்கு நடமாடும் ஏ.டி.எம். வேன் வரும் நேரத்தை அறிந்து அதன் வழியே பணத்தை எடுக்க வேண்டும். வங்கி வணிக தொடர்பாளர் மூலம் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது தங்கள் கைரேகையை பதிவு செய்தோ பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தங்கள் ஜன்தன் கணக்கில் வரவு செலவு செய்யப்படாமல் இருந்தால் கணக்கு முடக்கப்பட்டு இருக்கும். அப்படி முடக்கிய வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்படாது. முடக்கப்பட்ட வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்திட தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலை வங்கியில் வருகிற 14-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com