

திண்டுக்கல்:
அபிராமி அம்மன் கோவில்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி திருவிழா நாட்களில் நாள்தோறும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் புறப்பாடு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதன்பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் பூப்பல்லக்கில் வீதி உலா தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. மேலும் சித்திரை திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.
வேடசந்தூர்
வேடசந்தூரில் கடைவீதியில் உள்ள பழமையான காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி கோவிலில் நேற்று சிவாச்சாரியார் சிவக்குமார் தலைமையில் உற்சவர் சந்திரசேகரர்-சவுந்தரநாயகி திருக்கல்யாணம் நடந்தது.
இதேபோல் சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி விசுவநாதர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவையொட்டி விசாலாட்சி அம்மன்-விசுவநாதர் திருக்கல்யாணம் நடந்தது.
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டியில் ஸ்ரீராம அழகர் தேவஸ்தானம் சார்பில் சின்னாளப்பட்டி கோட்டை மந்தை மைதானத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மணமகன் சார்பில் அனைத்து வைபவங்களும், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மணமகளுக்கு கன்னிகா தானம் நடைபெற்று மாலை மாற்றி, வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தார்.
நிலக்கோட்டை
நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளம் கிராமத்தில் பழமையான லிங்கேஸ்வரர்-ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஆதிருத்திர லிங்கேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் திருமணக்கோலத்தில் நிலக்கோட்டை நகரில் வீதி உலா வந்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் பழமையான வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி
பழனி மேற்குரத வீதியில் லட்சுமி-நாராயணப்பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வடக்கு வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட மணமேடையில் வைணவ முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு நடைபெற்றது. விழாவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 8.50 மணிக்குள் திருத்தேரேற்றமும், காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.