திருப்பூர் மாவட்டத்தில், பிரசவித்த பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் பிரசவித்த பெண் உள்பட 2 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பிரசவித்த பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு
Published on

திருப்பூர்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள். இதைத்தொடர்ந்து 114 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் பின்னர் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. தொடர்ந்து பல்வேறு தளர்வுகளும் திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கி வந்தது. பனியன் நிறுவனங்களும் இயங்க தொடங்கின. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

அந்த மாணவி கடந்த மே மாதம் 25-ந் தேதி மூலனூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்து தங்கினார். தொடர்ந்து அங்கு 10 நாட்கள் குடும்பத்தினருடன் அவர் வசித்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் நேற்று முன்தினம் திருப்பூர் அனுப்பர்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து உடுமலை செல்லம் குடியிருப்பு பகுதிக்கு 81 வயது முதியவர் ஒருவர் கோவை வழியாக திருப்பூருக்கு வந்தார். அவரின் சளி மற்றும் ரத்த மாதிரி கோவையில் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் அந்த பரிசோதனை முடிவுகள் வந்ததில் அந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுபோல் காங்கேயம் முல்லைநகர் அகஸ்திலிங்கம்பாளையம் ரோட்டை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு கடந்த 10-ந் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை பரிசோதனை செய்ததில் அதற்கு கொரோனா தொற்று இல்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் மூலம் இந்த பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு 117 பேர் என நேற்று இருந்தது. இதனால் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்றா? அல்லது இருவருக்கு கொரோனா தொற்றா? என்ற குளறுபடி ஏற்பட்டது. இருப்பினும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குளறுபடி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் இருந்து வந்த அறிக்கையின்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று என்றும், மொத்த பாதிப்பு 117 எனவும் இருந்தது. 118 பேருக்கு பதிலாக 117 என இருந்தது. இதற்கான காரணம் என்னவென்றால் திருப்பூரில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 22 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனால் அவருக்கு தொற்று ஏற்பட்டதால், அது கோவை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட கணக்கில் 116-ல் இருந்து 1 மட்டும் சேர்க்கப்பட்டு 117 என இருந்தது. விரைவில் இந்த எண்ணிக்கை திருப்பூர் கணக்கிற்கு 118 என மாறிவிடும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com