

மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் பெள்ளாதி என்கிற ரங்கசாமி (வயது 86), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணம்மாள் (68). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது வீட்டின் கதவில் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயி ரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கண்ணம்மாள் ஓடிச்சென்று ரங்கசாமி மீது விழுந்து கதறி அழுதார். சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு கண்ணம்மாளும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஒரே நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சாவிலும் இணைபிரியாத தம்பதிக்கு ஜோதிமணி, சின்னத்தாய், லட்சுமி என மூன்று மகள்கள், நாகராஜ் முருகேசன் என 2 மகன்கள், மற்றும் பேரன் பேத்திகள் உள்ளனர்.