ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் அனிதா குமாரசாமி வேட்புமனு தாக்கல்

ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் அனிதா குமாரசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் அனிதா குமாரசாமி வேட்புமனு தாக்கல்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் சிவமொக்கா, மண்டியா, பெல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ராமநகரில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். உதவி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனுவை தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மனு தாக்கலுக்கு முன்பு ராமநகரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் குமாரசாமி, அனிதா குமாரசாமி ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். இந்த பூஜையின்போது, அங்கு கருவறை வாயிலின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த மலர் மாலை வலது புறத்தில் இருந்து திடீரென சரிந்து விழுந்தது. இது அனிதா குமாரசாமியின் வெற்றிக்கு சாதகமான நல்ல சகுணம் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக்கொண்டனர். மனுதாக்கல் செய்த பிறகு அனிதா குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சியின் தொண்டர்கள் விரும்பினர். அதன்படி நான் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தொகுதியில் காங்கிரசுக்கும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் தான் நேரடி போட்டி உள்ளது. அதனால் காங்கிரஸ் தொண்டர்களிடம் சற்று அதிருப்தி ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. அதனால் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனது வெற்றிக்கு பாடுபட வேண்டும். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் இந்த தொகுதியில் கட்சிக்காக உழைத்துள்ளேன். குமாரசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்தார். அந்த திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால், அந்த திட்டங்களை எல்லாம் முழுமையாக நிறைவேற்றுவேன். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுவதாக கூறுவது தவறு. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

குமாரசாமிக்கும், ராமநகர் தொகுதிக்கும் இடையே தாய்-மகன் உறவு உள்ளது. அதே போல் என்னையும் தொகுதி மக்கள், மகளாக கருதி வெற்றி பெற வைக்க வேண்டும். குமாரசாமியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பேன். இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com