கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க பொருளாதார ரீதியாக மாநிலங்களை பலப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு சரத்பவார் வலியுறுத்தல்

கொரோனாவால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியை சமாளிக்க மாநிலங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசை சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க பொருளாதார ரீதியாக மாநிலங்களை பலப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு சரத்பவார் வலியுறுத்தல்
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு மே 3-ந் தேதியுடன் முடிகிறது. அடுத்து என்ன எதிர்கால நடவடிக்கைகளை பிரதமர் அறிவிப்பார் என்பதை நாம் அனைவரும் கவனித்து வருகிறோம். இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். இயல்பு நிலையை மீட்டெடுக்க கவனமாக செயல்பட வேண்டும்.

மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியம். பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். ஊரடங்கால் மராட்டிய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வருவாய் பற்றாக்குறை

2020-21 -ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின்படி மராட்டிய அரசுக்கு சுமார் 3.47 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக மாநில வருவாயில் ரூ.1.40 லட்சம் கோடி பற்றாக்குறை அதாவது 40 சதவீத இழப்பு ஏற்படக்கூடும்.

இது மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது நிலவும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

தற்போதைய சவாலை சமாளிக்க மாநிலங்களை மத்திய அரசு பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உதவ பயிர்கடன்களுக்கான வட்டி விகிதத்தை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com