இருப்பு வைத்து கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு: நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் 3-வது நாளாக நிறுத்தம் வியாபாரிகள் போராட்டம்

வெங்காயம் இருப்பு வைத்து கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து இருப்பதை கண்டித்து நாசிக் சந்தைகளில் நேற்று 3-வது நாளாக ஏலத்தை நிறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பு வைத்து கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு: நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் 3-வது நாளாக நிறுத்தம் வியாபாரிகள் போராட்டம்
Published on

மும்பை,

நாட்டில் வெங்காய விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. மும்பையில் சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மராட்டியத்தின் மற்ற பகுதிகள் மற்றும் தமிழகத்திலும் வெங்காய விலை அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் வியாபாரிகள் வெங்காய இருப்பு வைத்து கொள்வதற்கான உச்ச வரம்பை கடந்த வாரம் மத்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி சில்லரை வியாபாரிகள் 2 டன் வரையிலும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் தான் இருப்பு வைத்து கொள்ள முடியும். இந்த உத்தரவு வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இதற்கிடையே வெங்காய இருப்பு வைத்து கொள்ள கட்டுப்பாடு விதித்து இருக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த மாவட்டத்தில் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய லசல்காவ் வெங்காய சந்தை உள்ளது. மேலும் நாசிக் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவ் வெங்காய சந்தை உள்பட 15 ஏ.பி.எம்.சி. சந்தைகளில் நேற்று 3-வது நாளாக மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்காய ஏலத்தை நிறுத்தி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

இதன் மூலம் நாசிக்கில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காயம் வினியோகம் செய்யப்படுவது தடைப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாட்டில் மேலும் விலை உயர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாசிக் சென்று வெங்காய வியாபாரிகளை சந்தித்து பேசினார். அப்போது வெங்காய வியாபாரிகள் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் பேசுவதாகவும், ஏலத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் வியாபாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் வெங்காய விலை உயர்வு பிரச்சினைக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் எனவும் சரத்பவார் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com