விளைபொருட்களை விற்பனை செய்ய உழவன் இ-சந்தை செயலி - மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை வியாபாரிகளை தொடர்பு கொண்டு விற்பனை செய்ய உழவன் இ-சந்தை எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
விளைபொருட்களை விற்பனை செய்ய உழவன் இ-சந்தை செயலி - மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதையொட்டி, விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறவும், விவசாய விளைபொருட்கள் மாவட்டத்திலுள்ள வியாபாரிகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் வழி வகை செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தாங்களாகவே வியாபாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்திட வசதியாக தமிழக அரசு கட்டணமில்லா உழவன் இ-சந்தை எனும் சேவையை உழவன் செயலி மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த சேவையின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளைப்பொருட்களையும் இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

விற்பனை செய்ய வசதி

இந்த உழவன் செயலியின் வாயிலாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொண்டு பொருட்களை லாபகரமான விலையில் விற்பனை செய்து பயனடையலாம்.

தற்சமயம் உழவன் செயலியில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் போன்றவைகள் மட்டுமே விற்பனை செய்து கொள்ள வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளது. இந்த வசதி பிற விளைபொருட்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும் ஏற்படும் சந்தேகங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறவும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் விற்பனை செய்திட வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com