

விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ. விடுதியில் அதியமான் என்பவர் காப்பாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிட நல மாணவர் விடுதி ஒன்றில் காப்பாளர் பணிக்கு இடமாறுதல் பெற விரும்பினார்.
இதற்காக விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த வந்தவாசியை சேர்ந்த துணைவேந்தன் (வயது 54) என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று அதியமான் கூறவே அப்படியானால் ரூ.50 ஆயிரம் கொடுக்கும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே இடமாறுதல் அளிக்க முடியும் என்று துணைவேந்தன் கறாராக கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அதியமான், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள துணைவேந்தன் வீட்டிற்கு சென்று அவரிடம் கொடுத்தார். அந்த பணத்தை துணைவேந்தன் வாங்கியபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே துணைவேந்தன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம் சாட்டப்பட்ட துணைவேந்தனுக்கு (61) 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.