வாலிபரிடம் குழந்தையை கொடுத்த பெண் மாயம்

திருப்பதியில் வாலிபரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு பெண் மாயமானார். அந்த குழந்தை சென்னை திருமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
வாலிபரிடம் குழந்தையை கொடுத்த பெண் மாயம்
Published on

அம்பத்தூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு, இந்திரா நகரை சேர்ந்த உமாபதி என்பவரது மகன் நிதின் (வயது 24). பள்ளி படிப்பை முடித்த இவர் வேலை ஏதுமின்றி இருக்கிறார். கடந்த 1-ந் தேதி அவர் வீட்டில் கோபித்துக்கொண்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். 2-ந் தேதி காலை திருப்பதியில் பாத்திமா (26) என்பவரை சந்தித்தார்.

அப்போது பாத்திமா, தான் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் என்று கூறி நிதினிடம் அறிமுகமானார். பாத்திமா தன்னுடன் ஒரு வயது ஆண் குழந்தையை வைத்திருந்தார். அந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து பலவீனமாக இருந்தது. இக்குழந்தையின் சிகிச்சைக்காக தான் திருப்பதி வந்ததாகவும், வந்த இடத்தில் பணமின்றி கஷ்டப்படுவதாகவும் கூறினார்.

இதை நம்பி நிதினும் தன்னால் முடிந்த உதவியை செய்தார். பாத்திமா தற்போது சென்னை திருமங்கலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய நிதின் சென்னைக்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.

சென்னை வருவதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது குழந்தையை நிதினிடம் கொடுத்த பாத்திமா கழிவறை சென்று வருவதாக கூறி சென்றவர் தலைமறைவாகிவிட்டார்.

எங்கு தேடியும் பாத்திமா கிடைக்காத நிலையில் நிதின் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள் சென்னை சென்று புகார் கொடுக்கும்படி கூறியதையடுத்து நிதின் நேற்று இரவு சென்னை வந்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பாத்திமா திருமங்கலத்தில் ஒரு கம்பெனியில் பணிபுரிவதாக கூறியதும் பொய் என தெரியவந்தது. இதனையடுத்து நிதினிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் அமைந்தகரை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமா இந்த குழந்தையை கடத்தி வைத்திருந்தாரா? அவர் யார்? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com