

பெங்களூரு,
ஆன்லைன் மருந்து விற்பனை, சரக்குசேவை வரியை எதிர்த்து கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மருந்து கடைகள், உணவகங்கள் மூடப்படுகின்றன.
சரக்கு, சேவை வரி திட்டத்தில் உணவகங்களுக்கு 12 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உணவகங்களுக்கான இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும், ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் மருந்து கடைகள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர் சங்கங்கள் இன்று(செவ்வாய்கிழமை) தனித்தனியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
பெங்களூரு நகர உணவகங்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் ஹெப்பார் கூறுகையில், ஜி.எஸ்.டி.யில் உணவகங்களுக்கு 12 சதவீதம் வரி நிர்ணயித்து இருப்பதால் அதை குறைக்கக் கோரி தென்இந்தியா முழுவதும் இன்று உணவகங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை நிறுத்தம் கர்நாடகம் முழுவதும் நடைபெறும். ஜி.எஸ்.டி.யில் குளு, குளு வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவீத வரியும், குளு, குளு வசதியுள்ள உணவகங்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இந்த வரியால் வாடிக்கையாளர்கள் மீது அதிக சுமை ஏற்படும். மேலும் எங்களின் வியாபாரமும் பாதிக்கப்படும். பொதுமக்கள் சாலையோர கடைகளுக்கு சென்று சாப்பிடும் நிலை ஏற்படும். நாங்கள் இன்று மைசூரு வங்கி சர்க்களில் போராட்டம் நடத்துகிறோம். பெங்களூருவில் மட்டும் சுமார் 5 ஆயிரம் உணவகங்கள் மூடப்படுகின்றன என்றார்.
அதே போல் கர்நாடகம் முழுவதும் இன்று மருந்து கடைகளும் மூடப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும் சுமார் 8,500 மருந்து கடைகள் தங்களின் விற்பனையை நிறுத்துகின்றன. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.