கேரளாவில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம்

கேரளாவில் தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.
கேரளாவில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம்
Published on

களியக்காவிளை,

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் நாடுமுழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி, கேரளாவில் நேற்று பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.

கேரளதமிழக எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு பஸ்கள், வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால், களியக்காவிளை பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் வந்து நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று வேலைநிறுத்தம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் எல்லைப்பகுதியான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. இதனால், திருவனந்தபுரத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

களியக்காவிளையில் இருந்து கேரள பகுதியான பாறசாலை, இஞ்சிவிளை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு போன்ற தமிழக பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தால், நேற்று கேரள பகுதி வழியாக இயங்கும் தமிழக பஸ்கள் மாற்றுப்பாதையில் இயங்கின. குறிப்பாக களியக்காவிளையில் இருந்து பனச்சமூடுக்கு செல்லும் பஸ்கள் மேக்கோடு வழியாகவும், கொல்லங்கோடு செல்லும் பஸ்கள் கோழிப்போர்விளை வழியாகவும் இயங்கின.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லகூடிய பயணிகள் ரெயில் நிலையங்களில் குவிந்தனர். இதனால், கேரளாவுக்கு சென்ற ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com