கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் ஆர்வம்; விலைபேசி முன்பணம் கொடுத்து செல்கின்றனர்

கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விலைபேசி முன்பணமும் கொடுத்து செல்கின்றனர்.
கறம்பக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகள் நன்கு வளர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
கறம்பக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகள் நன்கு வளர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
Published on

பொங்கல் சாகுபடி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது செங்கரும்பு. பொங்கல் விழாவில் பூஜை பொருளாக பயன்படுத்தப்படும் கரும்புகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து மகிழ்வர் கறம்பக்குடி பகுதியில சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் தடையின்றி கிடைத்ததால் கரும்புகள் தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ளன. பொங்கல் விழாவிற்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெளியூர் வியாபாரிகள்

கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் நல்ல இனிப்பு சுவை மிக்கது என்பதாலும், மண்ணின் வளத்தால் நீண்டு வளரும் தன்மை கொண்டு இருப்பதாலும் கறம்பக்குடி கரும்புக்கு மவுசு அதிகம். இதனால் திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் கறம்பக்குடி பகுதிக்கு வந்து கரும்புகளை பார்வையிட்டு விலைபேசி முன்பணம் கொடுத்து சென்றுள்ளனர். ஒரு கரும்பு ரூ.14, முதல் ரூ.18 வரை விலை பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயி ஒருவர் கூறுகையில், பேசியபடி வியாபாரிகள் பணம் கொடுத்து கரும்புகளை

வாங்கிச் சென்றால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் கடைசி நேரத்தில் வரத்து அதிகம், விலை இல்லை, என்றெல்லாம் காரணம் சொல்லி விலையைக் குறைக்கிறார்கள். சிலர் வாங்கவே வருவது இல்லை. அதேவேளை சந்தையில் விலை அதிகரித்தாலும் நாங்கள் பேசியபடியே கரும்புகளை விற்பனை செய்கிறோம். ஆனால் வியாபாரிகள் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. இதனால் சில நேரங்களில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகிறது. எனவே லாபம் வந்தால் வியாபாரிகளுக்கு நஷ்டம் என்றால் விவசாயிகளுக்கு என்ற நிலை மாறினால் தான் விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com