கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன் மீட்பு - போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன் மீட்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன் மீட்பு - போக்குவரத்து பாதிப்பு
Published on

கூடலூர்,

தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட 14 போலீசார் நேற்று முன்தினம் காலை திருப்பூரில் இருந்து கூடலூர் நோக்கி ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை தர்மபுரி மாவட்டம் வயிரநத்தம் பகுதியை சேர்ந்த அன்பரசன்(வயது 28) என்பவர் ஓட்டினார். மாலை 5 மணியளவில் கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை வேன் இழக்கும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக ஊசிமலை-தெய்வமலைக்கு இடைப்பட்ட பகுதியில் வேனை சாலையோரம் நிறுத்தினார். அப்போது 6 போலீசார் மட்டும் வேனில் அமர்ந்திருந்தனர். மீதமுள்ளவர்கள் வேனை விட்டு கீழே இறங்கி நின்றனர். அப்போது திடீரென சாலையோரத்தில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிவகங்கை மாவட்டம் செஞ்சை பகுதியை சேர்ந்த போஸ் என்பவரது மகன் ராஜா(34) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மகுடீஸ்வரன்(32), துளசிராமன்(36), சதிஸ்பிரபு(33), நாகராஜ்(28), டிரைவர் அன்பரசன்(28) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன், தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) அனில்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் கவிழ்ந்த வேனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விடிய, விடிய போராடியும் வேனை மீட்க முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்த வேனை மீட்கும் பணி தொடங்கியது.

அப்போது கிரேன் மூலம் 10 அடி உயரத்துக்கு வேன் மேலே கொண்டு வரப்பட்டது. திடீரென பாறை இடுக்கில் வேன் சிக்கியதால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் கூடலூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மீட்பு லாரி வரவழைக்கப்பட்டது. பின்னர் மதியம் 1 மணியளவில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மாலை 4.45 மணியளவில் கிரேன் உதவியுடன் வேன் வெளியே எடுக்கப்பட்டு, சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 5 மணியளவில் அந்த வழியே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. மீட்பு பணியால் கூடலூர்-ஊட்டி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா மற்றும் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் கூடலூருக்கு வந்தனர். பின்னர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் பெருந்தல்மன்னா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையில் உயிரிழந்த ராஜாவின் உடல் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதற்கட்டமாக அரசின் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ராஜாவின் குடும்பத்தினரிடம் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் வழங்கினார். மேலும் ராஜாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com