

செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரங்களில் செய்யாறு முக்கிய நகரமாக திகழ்கிறது. வருவாய் கோட்டத்தின் தலைமையிடமாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகிறது. செய்யாறு நகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக ஆற்காடு சாலை, காந்தி சாலை மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதி விளங்கி வருகிறது. செய்யாறு நகரையொட்டி பைபாஸ் சாலை சென்றாலும் வாகனங்கள் பைபாஸ் சாலையில் செல்லாமல் நகருக்குள் இருக்கும் மிக குறுகிய சாலையிலேயே செல்லுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நேரம் மட்டுமின்றி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். குறுகிய சாலையின் இருபுறங்களிலும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதுடன், வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை மதிக்காமல் தாறுமாறாக செல்லுவதாலும் பிரதான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
வாகன போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்த வேண்டிய காவல்துறையினரோ போதிய காவலர்கள் இல்லாததால் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒருவழிப்பாதை என அறிவித்தும், அறிவிப்பு பலகை வைத்தும் நகரின் எல்லையான பாலத்தின் அருகில் இருந்து சாலையை பிரித்தாலும், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் ஓட்டுனர்கள் சாலை விதிகளை மீறி குறுகிய சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
அதே போன்று முகூர்த்த நாள், முக்கிய தினங்கள், அரசியல் பிரமுகர்களின் நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிரதான சாலையான காந்தி சாலை, மார்க்கெட் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியின்றி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதால் இங்கு நடக்கும் விழாக்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை மண்டபத்திற்கு வெளியே சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன்காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, போதுமான அளவுக்கு போக்குவரத்து போலீசாரை நியமித்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும், ஆக்கிரமிப்பு செய்துள்ள கடை உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, வெளியூர் செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.