போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து முடங்கியது - இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?

அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக கர்நாடகத்தில் நேற்று 2-வது நாளாக பஸ் போக்கு வரத்து முடங்கியது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுடன் போக்கு வரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து முடங்கியது - இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், கொரோனாவுக்கு பலியான ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பெங்களூருவில் கடந்த 10-ந் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். சுதந்திர பூங்காவில் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்களுடன், போக்குவரத்து துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

இதன் காரணமாக நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன.

அதாவது மாநிலத்தில் 16 ஆயிரத்து 733 அரசு பஸ்கள் தினமும் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் 3,770 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டன. இதனால் 50-க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.

இதனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் விரல் விட்டு எண்ணும் அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. பஸ் நிலையங்கள், பணிமனைகளின் முன்பாக அமர்ந்து 2-வது நாளாகவும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பிற ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.

அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால், பெங்களூரு மெஜஸ்டிக் பி.எம்.டி.சி. பஸ் நிலையம், கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையம் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மெஜஸ்டிக் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்களில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு போக முடியாமல் பரிதவித்தார்கள். பெங்களூருவில் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். குறிப்பாக மெட்ரோ ரெயில்களில் அதிகளவில் பயணிகள் சென்றதை காண முடிந்தது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் பயிற்சி டிரைவர்கள் மூலமாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் நேற்றும் 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அதே நேரத்தில் பெங்களூரு உள்பட சில மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்களை, தனியார் டிரைவர்கள் ஓட்டி சென்றார்கள்.

ஆனாலும் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் நேற்றும் அரசு பஸ்கள் ஓடாததால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அரசு பஸ் சேவை முற்றிலும் முடங்கியது. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் நேற்று எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். அதுபோல, பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் ஊழியர்கள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.

அரசு மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களின் பிடிவாதம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தான் அதிக தொந்தரவை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், பாதிப்புக்கும் உள்ளானார்கள். இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ் நிலையங்கள், பணிமனைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் அடிப்படை தேவையாக போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் தான் அதிக தொந்தரவை அனுபவித்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்படி போக்குவரத்து துறை மந்திரி லட்சுமண் சவதிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பணிக்கு திரும்பிய பின்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் போக்குவரத்து துறை மந்திரி லட்சுமண் சவதியுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களிடம் கூறியதாவது;-

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். முதல்-மந்திரி எடியூரப்பாவுடனும் பேசியுள்ளேன். முதல்-மந்திரி எடியூரப்பாவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் படி ஊழியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சரியல்ல. முதலிலேயே கூறி இருந்தால், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்போம். இப்போதும் போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன். எனவே போராட்டதை திரும்ப பெற வேண்டும்.

அதிகாரிகள் அழைப்பு விடுத்தும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. ஊழியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நான் செல்ல முடியாது. விதானசவுதா, என்னுடைய வீட்டுக்கு வந்தாலும், பேச்சு வார்த்தைக்கு நான் தயார். ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், நாளை முதல் (அதாவது இன்று) தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்களின் கட்டணத்தின் அடிப்படையிலேயே தனியார் பஸ்கள் இயக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியார் டிரைவர்கள் மூலமாகவும், அரசு பஸ்கள் இயக்கப்படும். இதுதொடர்பாக அதிகாரிகள், தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறுகையில், எங்களை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை. போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். நாளை (இன்று) முதல் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அமைதியான முறையில் இந்த போராட்டம் நடக்கும். தனியார் பஸ்களை அரசு இயக்கினாலும், தனியார் டிரைவர்கள் மூலம் பஸ்சை இயக்கினாலும், அதுபற்றி கவலைப்பட போவதில்லை.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். பெங்களூரு மவுரியா சர்க்கிளில் உள்ள காந்திசிலை முன்பாக ஊழியர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள். அதுபோல, மற்ற மாவட்டங்களில் காந்தி சிலை இருந்தால், அதற்கு முன்பாகவும், இல்லையெனில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காந்தியின் உருவபடத்தை வைத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள். போக்குவரத்து ஊழியர்கள் எந்த தவறும் செய்யவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராடுகிறார்கள். அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க எந்த அவசியமும் ஏற்படவில்லை என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேசினார். பின்னர் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலில் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (அதாவது இன்று) காலை 10 மணியளவில் பெங்களூரு விகாச சவுதாவில் போக்குவரத்து சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர்களும் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு போக்குவரத்தில் உள்ள 4 கழகங்களை சேர்ந்த சங்கங்களின் தலைவர்கள், பிற நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள். கோடிஹள்ளி சந்திரசேகர் விவசாய சங்க தலைவர். அவருக்கும், போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

போக்குவரத்து கழக ஊழியர்களின் முதல் கோரிக்கையான அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றுவது மிகவும் கடினம். அதை தவிர்த்து ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது. அதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாணப்படும். அரசு ஊழியர்களை காட்டிலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பிற சலுகைகள், சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com