

திருவாரூர்,
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போலீஸ் பாதுகாப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் பங்கேற்றனர்.
இதன் காரணமாக 73 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையிலே நிறுத்தப்பட்டு இருந்தது. வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவாரூர் பஸ் நிலையத்தில் இருந்து பல பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. வேலை நிறுத்தத்தையொட்டி பணிமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மன்னார்குடியில் பயணிகள் தவிப்பு
ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான அரசு பஸ்கள் மதுக்கூர் சாலையில் உள்ள அரசு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் மன்னார்குடி பஸ் நிலையத்தில் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருமக்கோட்டை
பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் திருமக்கோட்டையில் நேற்று பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் பஸ்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.