தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம்
Published on

கன்னியாகுமரி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியானார்கள்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் கன்னியாகுமரி சர்வதேச சரக்குபெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.

இந்த ஊர்வலத்தில் கன்னியாகுமரி சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, சிலுவை நகர், புதுகிராமம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, முகிலன்குடியிருப்பு, தென்தாமரைகுளம் ஆகிய 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தங்கள் ஊர்களில் இருந்து ஒன்று திரண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்த அவர்கள், கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.

மேலும், பங்கு தந்தையர்கள் ஜோசப் ரொமால்டு, கில்டஸ், ஜாண் ஜோர் கென்சன், பிரபு தாஸ், பென்சிகர், பெனிட்டோ மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், கன்னியாகுமரி சர்வதேச சரக்கு பெட்ட மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபா, இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, செயலாளர் கோவளம் வெனிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் காந்தி மண்டபம் வளாகத்தில், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. நேற்று நடைபெற்ற மவுன ஊர்வலத்தையொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேனுகோபால் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோல் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சலில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடந்தது.

இதில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ், மாநில பொதுசெயலாளர் நவீன்குமார், மாநில செயலாளர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், நகர செயலாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com