

நெய்க்காரபட்டி,
பழனியை அடுத்த பாப்பம்பட்டி குடியிருப்பு பகுதியில் ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் இந்த கடைக்கு மதுப்பிரியர்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் அப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அந்த மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த பழனி தாலுகா போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
அதிகாரிகள் சமரசம்
இந்த நிலையில் ஒரு பெண் ஓடிச்சென்று மதுக்கடை அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார். அப்போது மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அவர் கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து தகவலறிந்த தாசில்தார் (கலால் பிரிவு) குழிவேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.