

கம்பம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சையது மரைக்காயர் (வயது 55). சிப்ஸ் வியாபாரி. இவர், கம்பம் புதிய பஸ்நிலையத்தின் தென்புறத்தில் உள்ள மரம் இழைக்கும் கூடம் அருகே கொலை செய்யப்பட்டு கடந்த 12-ந்தேதி பிணமாக கிடந்தார். அவருடைய தலை சிதைக்கப்பட்டிருந்தது. தடயத்தை அழிப்பதற்காக, அவருடைய உடலுக்கு தீ வைத்து விட்டு கொலையாளிகள் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, உலகநாதன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவத்தன்று இரவு கம்பம் பஸ்நிலையம், மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கம்பம் ஏகலூத்து 18-ம் கால்வாய் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசை மகன் ரகு (32), கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த சின்னாத்தேவர் மகன் சிவமாயன் (36) என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அவர்கள் 2 பேரும் சேர்ந்து சையது மரைக்காயரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான ரகு, சிவமாயன் ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 2 பேரும் நண்பர்கள். மதுபானம் குடித்து விட்டு கம்பம் புதிய பஸ்நிலைய பகுதியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தோம். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பஸ்நிலையத்தின் தென்புறத்தில் உள்ள மரம் இழைக்கும் கூடம் அருகே சென்றோம். அப்போது, சிப்ஸ் வியாபாரி சையது மரைக்காயர் அங்கு மதுபானம் குடித்து கொண்டிருந்தார்.
அவர் அருகே நாங்கள் சென்று குடிப்பதற்கு மதுபானம் கேட்டோம். ஆனால் அவர் தர மறுத்தார். இருப்பினும் நாங்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து எங்களை தாக்கினார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டோம்.
இதேபோல் அடுத்த நாள் அங்கு சென்றோம். அப்போது சையது மரைக்காயர் அதே இடத்தில் அமர்ந்து மதுபானம் குடித்து கொண்டிருந்தார். எங்களை அழைத்த அவர் ஓசியில் மதுபானம் கொடுத்தார். நாங்களும் மதுபானம் குடித்தோம். அப்போது எங்களுக்கும், மரைக்காயருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அன்றைய தினமும் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து அவர் எங்களை அடித்தார். இதனால் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். எங்களை தாக்கிய அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, சையது மரைக்காயரை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். ஆனால் சில நாட்களாக அவர் அந்த இடத்துக்கு வரவில்லை.
இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி இரவு அங்கு சென்றோம். சையது மரைக்காயர் அந்த இடத்தில் மதுபானம் குடித்து கொண்டிருந்தார். அவருடன் சிலரும் அங்கு இருந்தனர். ஆட்கள் செல்லும் வரை காத்திருந்தோம். நள்ளிரவில் சையது மரைக்காயர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரின் அருகே கிடந்த பீர்பாட்டில் மற்றும் மரக்கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தோம்.
சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடி, துடித்து இறந்தார். பின்னர் தடயத்தை அழிப்பதற்காக, பாலித்தீன் பை மற்றும் துணியை அவரின் உடல் மீது போட்டு தீவைத்து விட்டு தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.