ஆவடி அருகே மின்சார ரெயிலில் 2 பெட்டிகள் தடம் புரண்டன

ஆவடி அருகே மின்சார ரெயிலில் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
ஆவடி அருகே மின்சார ரெயிலில் 2 பெட்டிகள் தடம் புரண்டன
Published on

ஆவடி,

சென்னை சென்டிரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில் புறப்பட்டது. இரவு 11.15 மணியளவில் அந்த ரெயில் ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு புறப்பட்டது.

சிறிது தூரம் சென்றதும் திடீரென ரெயில் பெட்டிகளுக்கு மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டது.

இதை பார்த்த ரெயில் டிரைவர் மீனா (வயது 35) உடனடியாக ரெயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது ரெயிலின் முன் பகுதியில் இருந்த 2-வது மற்றும் 3-வது பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இரவு நேரம் என்பதால் ரெயிலில் பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவர்கள் அலறி அடித்தபடி கீழே குதித்தனர். ரெயில் பெட்டிகள் கவிழாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் பயத்தில் கீழே இறங்கினர். அனைவரும் நள்ளிரவில் அங்கு தவித்தபடி நின்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் நடந்தும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தீப்பற்றி எரிந்த மின்கம்பி மற்றும் சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

மேலும் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை நேற்று அதிகாலையில் கிரேன் மூலம் தூக்கி தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். பின்னர் அங்கிருந்து டீசல் என்ஜின் மூலம் அந்த ரெயில் அண்ணனூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் காரணமாக ஆவடி- சென்னை சென்டிரல் இடையே சில ரெயில்கள் நேற்று மதியம் வரை ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சென்னை- அரக்கோணம், அரக்கோணம்-சென்னை இடையே மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

புறநகர் மின்சார ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டு இடையில் அண்ணனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்ரவாக்கம், கொரட்டூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காமல் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று சென்னை சென்டிரலுக்கு சென்றன. இடைபட்ட ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் மின்சார ரெயிலில் சென்னைக்கும், திருவள்ளூருக்கும் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். நேற்று காலையில் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அலுவல் காரணமாக செல்லும் பயணிகள் பஸ் மற்றும் ஆட்டோவில் சென்றனர். இதனால் அங்குள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நேற்று பகல் 12 மணிக்கு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு ரெயில் போக்குவரத்து சீரானது. ரெயில் தடம் புரண்ட இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக இயங்கின. மேலும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தன.

உயர்மின் அழுத்த கம்பியில் தீப்பொறி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தீப்பொறி வந்த உடன் ரெயிலை டிரைவர் நிறுத்தினார். அவர் தொடர்ந்து ரெயிலை இயக்கி இருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டு இருக்கலாம். டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com