

பண்ருட்டி,
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போதைக்காக மாற்று வழிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சாராயம் காய்ச்சும் செயல்களும் ஆங்காங்கே தலைதூக்கி உள்ளன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பண்ருட்டி பகுதியில் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பண்ருட்டி அடுத்த பேர் பெரியான்குப்பம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 பேர் கைது
அதன்பேரில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பேர்பெரியான்குப்பம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பேர் பெரியான்குப்பத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் வீட்டு தோட்டத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியை சேர்ந்த பெருமாள்(வயது 50), செல்வம்(46) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.