பூலாம்வலசு கிராமத்தில் அனுமதியின்றி நடந்த சேவல் சண்டை: சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் முதியவர்

அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்தது. இதில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூலாம்வலசு கிராமத்தில் அனுமதியின்றி நடந்த சேவல் சண்டை: சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் முதியவர்
Published on

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.. அதேபோல இந்தாண்டும் கடந்த 13, 14, 15-ந்தேதிகளில் சேவல் சண்டை நடைபெறும் என விழாக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த 13-ந்தேதி சேவல் சண்டை தொடங்கி நடைபெற்றது. 14-ந்தேதி தொடர் மழையின் காரணமாக சேவல் சண்டை நடைபெறவில்லை. மீண்டும் 15-ந்தேதி சேவல் சண்டை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று காலை எந்த முன் அனுமதியும் இல்லாமல் திடீரென பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சேவல் சண்டையில் ஒவ்வொரு சேவலின் காலிலும் மிகவும் கூர்மையான கத்தி கட்டப்பட்டு, இரு சேவல்களை மோத விடுகின்றனர். இதில் எந்த சேவலுக்கு உடம்பில் அதிகமாக கத்தி குத்து பட்டு இறந்துவிடுகிறதோ, அந்த சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள். இதேபோன்று நேற்று நடைபெற்ற சண்டையில் சேவல்களின் கால்களில் கத்தி கட்டப்பட்டு மோத விட்டனர். சேவல் சண்டை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருந்தது.

முதியவர் சாவு

இந்நிலையில் நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 60) என்பவர் சேவல் சண்டையில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தங்கவேலின் தொடைப்பகுதியில் குத்தி ஆழமாக இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது தங்கவேலுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தங்கவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி முதியவர் ஒருவர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com