வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

திருவண்ணாமலை,

பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் கடந்த மார்ச் 31-ந் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே நிவாரணம் வழங்கப்படும்.

10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ, வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ, ஜெராக்ஸ் நகல் எடுத்த விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் (மே) 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தாங்கள் தொடர்ந்து நிவாரணம் பெற வேலையில் இல்லை என்பதற்கான சுய உறுதி மொழி ஆவணத்தினை நேரில் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 3 ஆண்டுகள் நிவாரணம் பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணம் அளிக்கத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com