சாம்ராஜ்நகரில் ஆஸ்பத்திரிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை - மந்திரி சுரேஷ்குமார் பேட்டி

சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
சாம்ராஜ்நகரில் ஆஸ்பத்திரிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை - மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
Published on

பெங்களூரு,

சாம்ராஜ்நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந் தேதி ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது கர்நாடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுரேஷ்குமார், நேற்று சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அவர் முழு கவச உடை அணிந்து சென்று, கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சாம்ராஜ்நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எனது தலைமையில் ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த படையின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். ஆக்சிஜன் வினியோகம், படுக்கை வசதி, மருந்து வினியோகம், வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகள், மருத்துவ ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளுக்கு மூத்த அதிகாரிகளை உள்ளடக்கி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் தீவிரமாக பணியாற்றும். 3 நாட்களுக்கு ஒரு முறை எனது தலைமையிலான செயல்படையின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். தாலுகா அளவிலும் இத்தகைய செயல்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்படைக்கு உள்ளூர் எம்.எல்.ஏ. தலைவராக இருப்பார்.

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைககப்படுகின்றன. அதில் லேசான பாதிப்பு மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு இந்த மையங்களில் சிகிச்சை அளிக்கப்படும். உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் இந்த சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 5 நாட்களில் இந்த ஆஸ்பத்திரி செயல்பாட்டுக்கு வரும். மாவட்ட, தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகரில் இறப்புகளை தடுக்க ஒரு நிபுணர் குழுவை அனுப்பும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com