அமைச்சர்கள் பெயரை பயன்படுத்தி 63 பவுன்- ரூ.10 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை மணந்தவர்

அரசு வேலை வாங்கித்தருவதாக அமைச்சர்கள் பெயரை பயன்படுத்தி 63 பவுன், ரூ.10 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். இவர் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் பெயரை பயன்படுத்தி 63 பவுன்- ரூ.10 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை மணந்தவர்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் மகன் விஜய் (வயது22). இவரிடம், உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா (24) 13 பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இந்த நகையை திருப்பி கேட்டபோது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விஜய் தனது தம்பி தனுஷ் என்பவருக்கு வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். இதற்காக சவுமியா மேலும் ரூ.75 ஆயிரம் வாங்கினாராம். மேலும், விஜயின் உறவினரான விஸ்வா, பாலமுருகன் ஆகியோருக்கும் அரசு பஸ் டெப்போவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தலா ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினாராம். இதற்கு ராமநாதபுரம் அருகே உள்ள சிறுவயலை சேர்ந்த சதீஷ் (25) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.

சதீஷ் மூலமே சவுமியாவுக்கு பணம் சென்றுள்ளது.. இவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கண்டவர்களிடம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் வாங்கியதுடன், அரசு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி உள்ளனர்.

இதனால் விஜய் பணம் மற்றும் நகைகளை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். பணத்தினை அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டதாகவும் வேலை வாங்கி தந்துவிடுவார்கள் என்றும் கூறி காலம் கடத்தியுள்ளனர்.

எனவே விஜய் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அப்போது வேறு மாவட்டங்களில் மேலும் பலரிடம் இதுபோன்று சவுமியா மோசடி செய்த அதிர்ச்சி தகவல் தரியவந்தது. இதுவரை மொத்தம் 6 பேரிடம் 63 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் சுருட்டியதாகவும் தெரியவந்தது.

எனவே சவுமியா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீசை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது மோசடி திட்டத்தை சவுமியா அரங்கேற்றி உள்ளார். அங்கு தன்மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக யாராவது வாலிபர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி அவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

4 பேர் வரை திருமணம் செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி பயிற்சியில் உள்ளவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. 4 பேருக்கும் அவர் டிமிக்கி கொடுத்துவிட்டு நழுவி இருக்கிறார்.

கைதான சவுமியா, சதீஷ் ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் சவுமியாவை மதுரை சிறையிலும், சதீசை விருதுநகர் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com