வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
Published on

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூரில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கோவில் தமிழகத்தில் உள்ள ராமர் கோவில்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இங்கு சன்னதியில் கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். மேலும் ஹயகிரீவர் சன்னதியும் தனியாக உள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இக்கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை கோதண்டராமர், லட்சுமணன், சீதாதேவி, அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் தேரடி, கடைவீதி, தெப்பக்குளம் வழியாக வந்து நிலையை சென்றடைந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கீதா, நிர்வாக அலுவலர் தங்கலதா, வேதபாடசாலை முதல்வர் கோவிந்தன் மற்றும் கோவில் அலுவலர்கள், மண்டகபடிதார்கள், வடுவூர் வடபாதி, தென்பாதிதன்னரசு நாட்டை சேர்ந்த ஊர் பிரமுகர்கள் செய்து இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) சப்தாவர்ணம் எனப்படும் மலர் அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து விடையாற்றி விழா நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com