வைகை அணை நீர்மட்டம் உயர்வு, வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்பு

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
வைகை அணை நீர்மட்டம் உயர்வு, வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்பு
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. வைகை அணையின் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினமும் 70 பரிசல்களில் நீர்தேக்கத்தில் மீன்கள் பிடித்து வருகின்றனர். இந்த மீன்பிடி தொழில் வைகை அணை மீன்வளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பாதியை மீன்வளத்துறைக்கு மீனவர்கள் வழங்க வேண்டும். அந்த மீன்கள் மீன்வளத்துறை மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வைகை அணையை பொறுத்தவரையில் கட்லா, மிருகால், ரோகு வகையை சேர்ந்த மீன்கள் ஒருநாளைக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் வைகை அணை நீர்மட்டம் 54 அடியை எட்டியது. இதனால் நீர்தேங்கும் பரப்பளவு அதிகரித்துள்ளது.

இதனிடையே நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வைகை அணையில் மீன்கள் வலையில் சிக்குவது அடியோடு குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் வைகை அணையில் ஒருநாளைக்கு 20 கிலோவிற்கும் குறைவான அளவிலேயே மீன்கள் கிடைத்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு திருட்டுத்தனமாக பிடிக்கப்படும் மீன்கள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு, அந்த மீன்கள் க.விலக்கு, ஆண்டிப்பட்டி பகுதியில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருட்டுத்தனமாக நடைபெறும் இதுபோன்ற செயல்களால் மீன்வளத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. திருட்டு மீன்கள் தொடர்பாக அதிகளவு புகார்கள் வந்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com