மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடக்கம்

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடக்கம்
Published on

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக பரவாசுதேவபெருமாள் அருள்பாலிக்கிறார். உற்சவராக ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் மாடு மேய்க்கும் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

தாயார் சன்னதியில் மூலவராக செண்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் திருவிழா காணும் கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவமும், அதனை தொடர்ந்து நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும், ராபத்து உற்சவமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.

இதையொட்டி ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல்பத்து உற்சவ நாட்களில் உற்சவர் ராஜகோபாலசாமி, பெருமாள் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு தாயார் சன்னதி எதிர்புறம் உள்ள வெளிமுற்றத்துக்கு வருவார். அங்கு 12 ஆழ்வார்களுக்கும் மரியாதை செய்யும் சடங்கு நடைபெறும்.

பின்னர் ராஜகோபாலசாமி மூலவர் சன்னதிக்கு திரும்பி செல்வார். வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com