வாஜ்பாய் அஸ்தி கலசத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் அஸ்தி கலசத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
Published on

தர்மபுரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அவருடைய அஸ்தி அடங்கிய கலசங்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. முக்கிய ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும் இந்த அஸ்தி கலசங்களுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜனதாவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 7 அஸ்தி கலசங்களில் ஒன்று முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய கயிறு வாரிய தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓசூர், கிருஷ்ணகிரி, வழியாக நேற்று தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் அகரம் ரோட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து காரிமங்கலம் நகருக்குள் ஊர்வலமாக அஸ்தி வாகனம் வந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வாஜ்பாயின் அஸ்தி கலசத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இந்த அஸ்திகலசம் தர்மபுரி 4 ரோடு பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தொலைபேசி நிலையம் அருகே கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அஸ்தி கலசம் வைக்கப்பட்டது. அங்கு பா.ஜனதாவினர் மற்றும் பொதுமக்கள் அஸ்தி கலசத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் செல்லபாண்டியன், அழகுசிவன், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்ராஜ், வர்த்தகர்பிரிவு தலைவர் சரவணன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்ஜி, செயலாளர் ரங்கதுரை உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.அப்போது முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திகலசம் சேலம், ஈரோடு வழியாக பவானி கூடுதுறை பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் வாஜ்பாய் அஸ்தி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி, வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதே போல முன்னாள் எம்.பி. நரசிம்மன், பா.ஜனதா நிர்வாகிகள் கோட்டீஸ்வரன், முனவரி பேகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அஸ்தி கலசம் டி.பி.ரோடு, காந்தி சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்-ஜெயில் சாலை வழியாக தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஓசூர் வந்தது. பின்னர், ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜூ, மாவட்ட செயலாளர் ராஜி, மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் மற்றும் கட்சியினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஐ.என்.டி.யு.சி. மாநில மூத்த துணைத்தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன், ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கே.ஜி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் வாஜ்பாய் அஸ்திக்கும், அவரது படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், வாஜ்பாய் அஸ்தி கொண்டு செல்லப்பட்ட வாகனம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சூளகிரி நோக்கி சென்றது. அங்கு பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com