

நாமக்கல்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மணி கூண்டு அருகே பாரதீய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் மாநில துணைத் தலைவரும், ஊடகப்பிரிவு சென்னை கோட்ட பொறுப்பாளருமான சக்திவேல் தலைமையில் பாரதீய ஜனதாவினர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து சக்தி கல்வி கலாசார அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜூ, பரமேஸ்வரி உள்ளிட்டோர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக நகர பாரதீய ஜனதா சார்பில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் சுப்பிரமணியம், நகர தலைவர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் நாமக்கல்லில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் கோட்ட பொறுப்பாளர் முருகேசன், ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் ஹரிஹர கோபால் உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணி கூண்டில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த மவுன ஊர்வலம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், வணிக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.