பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது; டிரைவர் பலி

கல்வராயன்மலை அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 16 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது; டிரைவர் பலி
Published on

கச்சிராயப்பாளையம்,

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள கருமந்துறை கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, கரியாலூர், இன்னாடு, மொட்டையனூர், கரிசக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பகுதி மாணவர்களின் வசதிக்காக பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை இன்னாடு, மொட்டையனூர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று கருமந்துறை நோக்கி புறப்பட்டது. அந்த வேனை இன்னாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 30) என்பவர் ஓட்டினார்.

கல்வராயன்மலை அருகே மொட்டையனூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, திடீரென வேனின் அச்சு முறிந்து, முன்பக்க சக்கரங்கள் கழன்று ஓடின. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த மாணவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சந்தோஷ்குமார்(4), கிருஷ்ணன்(4), தமிழினியன்(13), கேமன்(10), காவ்யா(6), பிரியதர்ஷினி(8), பாலாஜி(10), கோபிகா(5), அரிதாஸ்(3), சந்தோஷ்(4) உள்ளிட்ட 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக மாவடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர், முறையாக பராமரிக்காத பள்ளி வாகனத்தை இயக்கிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்களுக்காக இயக்கப்படும் வாகனங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே இயக்க வேண்டும் என்றும் கூறி வெள்ளிமலை-சேராப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து வெங்கடேசன் மனைவி சித்ரா(28) கரியாலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com