

பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, கிருமிநாசினி ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன் மாதிரியாக திகழ்கிறது. தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது. எத்தனை வருடங்கள் வேலை செய்தாலும் தற்போதுள்ள இந்த சோதனையான கால கட்டத்தில் பணி செய்வது மிகவும் நன்றிக்குரியது. திருமங்கலம் தொகுதியில் உள்ள 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.
முன்னதாக அ.தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்ற 5-ம் வகுப்பு மாணவன், தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினான். அச்சிறுவனை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், தாசில்தார் சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, யூனியன் தலைவர் டாக்டர் சண்முகப்பிரியா பாவடியான், வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், அரசு வக்கீல் பாஸ்கரன், செயல் அலுவலர் வைரக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாணிக்கம் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், கூட்டுறவு இணைய மாநில தலைவர் செல்லப்பாண்டி, யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தனபால், ஜுலான் பானு, ஜெயமுருகன், பேரூர் செயலாளர் பாப்புரெட்டி, கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.