துணைவேந்தர்கள் நியமன முறைகேடு: கவர்னர் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் - கடலூரில் ஜி.கே.வாசன்

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக கவர்னர் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என்று கடலூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
துணைவேந்தர்கள் நியமன முறைகேடு: கவர்னர் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் - கடலூரில் ஜி.கே.வாசன்
Published on

கடலூர்,

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் விளைநிலங்களை அழிக்கும் திட்டங்கள் ஆகும்.

மக்களிடம் கருத்து கேட்காமல் திட்டங்களை கொண்டு வருவது ஒரு போதும் ஏற்புடையது அல்ல. விவசாயிகள் வயிற்றில் அடிக்கிற திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ஆதரவாக தமிழ்மாநில காங்கிரஸ் இருக்கும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. சமீப காலமாக முறையான கண்டுபிடிப்புகள், விசாரணைகள் நடந்து வருவதாக தெரிகிறது. குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. இதை முறையாக செய்ய வேண்டும்.

துணைவேந்தர்கள் நியமனம் குறித்து தமிழக கவர்னர், தெரிவித்துள்ள கருத்து சாதாரண கருத்து அல்ல. தமிழக அரசுக்கும், தமிழகத்துக்கும் அவப்பெயர் என்று நான் கருதுகிறேன். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது என்று மாநில கவர்னர் கூறும் போது, இது அதிர்ச்சியான செய்தி மட்டும் அல்ல. கல்வித்துறைக்கு ஆபத்தான செய்தி.

இது குறித்து விரிவான தகவல்களை கொடுக்க கூடிய கட்டாயத்தில் கவர்னர், அவரது மாளிகை இருக்கிறது. உண்மை நிலைக்கு ஏற்றவாறு கவர்னர் தகவல் அளிக்க வேண்டும். தவறு செய்தது யார்? உயர் பதவிகளில் இருப்பவர்களா? அவர்களின் கீழ் பதவியில் உள்ள அதிகாரிகளா? ஆட்சியாளர்களா? என்று கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற பொறுப்பு அரசிடம் உள்ளது.

இதை முழுமைப்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை. இல்லையென்றால் குற்றம் செய்பவர்களை மறைக்கக்கூடிய செயலாக இருக்கும்.

இடைத்தேர்தல் பற்றிய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு திருப்தி இல்லை. 5 மாநில தேர்தலோடு தமிழக இடைத்தேர்தலையும் நடத்தி இருக்க வேண்டும். ரெட் அலர்ட் மாறி தற்போது கிரீன் அலர்ட்டாக மாறி விட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுக்கான அடித்தளமாக இருக்கும். ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது சகஜம் தான். ஆனால் பாரதீய ஜனதா கட்சி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தமிழக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர், முதல்-அமைச்சர் சந்திப்பு இருக்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் பழைய நிலையிலேயே திறப்பதை ஏற்க முடியாது. அதேவேளையில் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் அதை ஏற்போம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ஞானச்சந்திரன், நெடுஞ்செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், பூண்டியாங்குப்பம் சாம்பசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com