கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் உதயகுமார் பேட்டி

கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் உதயகுமார் பேட்டி
Published on

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசினர்.

தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு புயல்கள் ஏற்பட்ட போது ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கை விடுக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது. அதுபோல் கஜா புயலின் போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்ட போது, புயல் திசைமாறி விடும் என பலரால் கருதப்பட்டது. ஆனாலும் மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் முதல் நாள் முழுவதும் தங்கியிருந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பிற மாவட்ட அமைச்சர்கள் தங்கியிருந்து மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், பொது மக்களின் துன்பத்தை போக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைச்சர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தலைவர் பழனியாண்டி, முன்னாள் சேர்மன் சுப்பையா, இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது. மத்திய அரசு இதுவரை எந்த நிதி உதவியும் புயலுக்கு வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே வழங்கிய நிதியானது பேரிடர் மீட்பு நிலுவைத்தொகையாகும். தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய தயாராக உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களுடைய நண்பர். அவர் அவசரப்பட்டு தி.மு.க..வில் இணைந்து விட்டார். தினகரனின் பழமொழி எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது. நாளை (இன்று) வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் எந்த திசையில் வரும் என்று உறுதி செய்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் மக்களிடம் தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com