

விழுப்புரம்,
விழுப்புரம் கணபதி நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் லாலி என்ற கார்த்திக் (வயது 32). இவர் தனது மனைவியும், நிறைமாத கர்ப்பிணியுமான கவிதாவை பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பையூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கார்த்திக் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழுத்து மற்றும் கையில் வெட்டு காயங்களுடன் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
விசாரணையில் அவர் பூந்தோட்டம், மேல்வன்னியர் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜா என்கிற காஜா(வயது 32) என்பதும், பிரபல ரவுடியான இவர் கார்த்திக்கின் நண்பர் என்பதும் தெரியவந்தது.
கொலை நடந்த வீட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் நேரில் பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் இருந்தபோது. இவரது நண்பர்களான ராஜா மற்றும் வி.மருதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வினோத் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றாக மது அருந்தியபோது குடிபோதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், வினோத் ஆகிய 2 பேரும் சேர்ந்து ராஜாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கார்த்திக் மீது 2 கொலை வழக்கு, வினோத், ராஜா மீது தலா ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. கார்த்திக், வினோத் ஆகியோரை பிடித்தால் தான் உண்மை சம்பவம் தெரியவரும் என்பதால் இருவரையும் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் தலை மறைவாக இருந்த கார்த்திக், வினோத் ஆகியோரை வலைவீசி தேடினர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் நேற்று மாலை இருவரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.